தாலிபான்கள் உள்பட யாரையும் தான் நம்புவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அப்கானிஸ்தானில் தாலிபான்களின் நிலை குறித்து வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாலிபான்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா ? என்பதை நாங்கள் பார்த்து கொண்டிருக்கத்தான் போகிறோம் என்றார். தாலிபான்களை நீங்கள் நம்புகிறீர்களா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பைடன், தாலிபான்கள் உள்பட யாரையும் நம்பவில்லை என்று அதிரடியாக பதிலளித்தார்.
மேலும் பேசிய அவர் நான் உங்களை உட்பட யாரையும் நம்பவில்லை, ஆனால் நான் உங்களை நேசிக்கிறேன். தாலிபான்கள் முதலில் ஒரு அடிப்படை முடிவை மேற்கொள்ள வேண்டும். தாலிபான்கள் இதுவரை இல்லாத வகையில் பொதுமக்களை ஒன்றிணைத்து நல்வாழ்வு அளிக்க நினைத்தால் அதற்கு பொருளாதாரம், வர்த்தகம், உட்பட பல்வேறு பிரிவுகளில் கீழ் பல நாடுகளின் உதவியையும் அவர்கள் பெற வேண்டியிருக்கும். அந்த வகையில் அவர்கள் தற்போது சர்வதேச அளவில் சட்டப்பூர்வமன்ன அங்கீகாரத்தை எதிர்பார்த்துள்ளனர்.