கரூர் மாவட்ட தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் 4 லட்சத்து 50 ஆயிரத்து 777 விவசாயிகள் இலவச மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 18 வருடங்களாக காத்திருக்கிறார்கள். நடப்பு நிதியாண்டிலேயே ஒரு லட்சம் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வரலாற்றிலேயே ஒரே வருடத்தில் ஒரு லட்சம் இலவச மின்சார இணைப்பு வழங்கப்படவுள்ளது இதுதான் முதல் முறை. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. மேலும் நிலக்கரி விவகாரத்தில் சென்னை, தூத்துக்குடியில் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் மேட்டூரில் ஆய்வு செய்யப்பட உள்ளது. இது குறித்து முழுவதுமாக விசாரணை செய்த பிறகு அதன் அறிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
அதன்பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அதிமுக ஆட்சியில், இது குறித்து இரண்டு அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் தங்கமணி தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அதன் விசாரணை அறிக்கை ஏன் வெளியிடவில்லை? யாரை காப்பாற்றுவதற்காக இதுபோன்ற முறைகேட்டை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்? அது எடுபடாது என்று தெரிவித்துள்ளார்.