ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரை சந்திக்க நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சென்றிருந்தார். ஹிட்லரின் மாளிகையில் இருந்த அவரது உதவியாளர்கள் நேதாஜியை வரவேற்று அழைத்து சென்று ஒரு அறையில் காத்திருக்க கூறினார்கள். அப்போது அங்கிருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். யாரையும் ஹிட்லர் எளிதில் நம்ப மாட்டார். இதனால் தன்னைப் போன்ற முக அமைப்பு கொண்டிருப்பவர்களை உடன் வைத்திருக்கும் ஹிட்லர் அதில் ஒருவரை நேதாஜியை சந்திக்க அனுப்பியுள்ளார்.
நேதாஜி இருந்த அறையில் ஒரு பொருளை எடுத்து வேறு இடத்தில் வைக்கும்படி கூறி விட்டு அந்த நபர் வெளியேறி விட்டார். ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எந்த சலனமுமின்றி அதனை கவனித்தும் கவனிக்காதது போல் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். ஹிட்லரை போன்ற தோற்றமுடைய மற்றவர்களும் நேதாஜி இருந்த அறைக்கு சென்றனர். அதில் ஒருவர் நேதாஜியின் எதிரே அமர்ந்துள்ளார் ஆனால் அப்போதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் புத்தகத்தை படிக்க தொடங்கினார் நேதாஜி.
வேறு ஒருவராக இருந்தால் ஹிட்லர் என்று பயந்து எழுந்து நின்று சல்யூட் அடிப்பார்கள். ஆனால் நேதாஜி எதையுமே பொருட்படுத்தாமல் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து ஹிட்லரின் உதவியாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இதைப்பற்றி ஹிட்லரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது கடைசியாக ஹிட்லர் நேரடியாக வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தார். அதன் பிறகு தான் நேதாஜி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்து ஹலோ மிஸ்டர் ஹிட்லர் என தனது கரங்களை நீட்டி கை குலுக்கி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹிட்லர் எப்படி நான் தான் ஹிட்லர் என்று அடையாளம் கண்டுகொண்டீர்கள் என கேள்வி கேட்கிறார். அதற்கு நேதாஜி சிரித்துக்கொண்டே எனது தோளில் கை வைக்கும் தைரியம் இந்த உலகத்தில் ஹிட்லரை தவிர வேறு எவருக்கும் இல்லை என்று கூறுகிறார். மேலும் நிஜத்திற்கும் நிழலுக்கும் உள்ள வித்தியாசம் கூட கண்டு பிடிக்க முடியாதவன் போராளியாகவும் தலைவனாகவும் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார். ஹிட்லருக்கு அனைவரும் பணிந்து வணக்கம் சொல்லும் நிலையில் முதல் முறையாக நேதாஜிக்கு ஹிட்லர் சல்யூட் அடித்து தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.