ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டமத்தான் கிராமத்தில் பாலையா-பத்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டாக்குறிச்சி கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. கடந்த 4 நாட்களாக பத்மா தனது விவசாய நிலத்திற்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று பத்மா விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அமைந்துள்ள கொட்டகையில் 60 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பத்மா உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி வட்ட வளங்கள் அலுவலர் சீனிவாசன், குடிமை பொருள் பறக்கும் படை தாசில்தார் பன்னீர்செல்வம், துணை தாசில்தார் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொட்டகையில் இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். அதன் பிறகு அந்த அரிசியை குடிமை பொருள் வளங்கள் குற்ற புலனாய்வு துறை ஆய்வாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த குற்ற பிரிவு புலனாய்வு துறை காவல் துறையினர் விவசாய நிலத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.