எந்த ஆட்சியாக இருந்தாலும் சில பகுதியில் போலீஸ் இப்[படி தான் இருக்கும் என தமிழக முதல்வரை சந்தித்த பின்பு திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றுவதில் ஏற்ப்பட்ட வன்முறை தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இது போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது இந்த ஆட்சி மட்டுமல்ல எந்த ஆட்சியிலும், அ.தி.மு.க. ஆட்சியிலும் கூட பல மாவட்டங்களில் பல இடங்களில் கொடி ஏற்றுவதற்கு காவல்துறையினர் தான் முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது வருவாய்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் அல்லது தாசில்தாரிடம் அல்லது கலெக்டரிடம் அனுமதி வாங்கி வாருங்கள் என்று காவல்துறையினர் சொன்னார்கள்.
வருவாய்த்துறை அதிகாரிகளைப் சந்தித்தால் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. காவல்துறையினர் தான் அனுமதி கொடுப்பார்கள். நாங்கள் எப்போது அனுமதி கொடுத்து இருக்கின்றோம் என வருவாய்த்துறையினர் சொல்கிறார்கள். ஆகவே வருவாய் துறை போலீஸ் துறையை சொல்வதும், போலீஸ் துறை வருவாய்த்துறையை சொல்வதும் இப்படி பல இடங்களில் கொடி ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
பல இடங்களில் கொடி ஏற்றிய பிறகு காவல்துறையினர் பொக்லைன் எந்திரத்தை வைத்து பிடிங்கி செல்கிறார்கள். பல இடங்களில் காவல்துறையினரின் முன்னிலையில் காவல்துறை இப்படி நடந்து கொள்வதால் சாதியவாத சக்திகளும் சேர்ந்து கொள்கிறார்கள். மோரூரிலும் அதுதான் நடந்தது. முதலில் யாரும் எதிர்க்கவில்லை. காவல்துறை 300பேர் 400 பேரை இறக்கி தலித்துகளை விரட்டுகின்ற சூழ்நிலையில் தான் பிற சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் கல்லெடுத்து வீசக்கூடிய, கட்டைகளை எடுத்து வீசக் கூடிய ஒரு நிலை உருவானது.
அவர்களை அந்த இடத்தில் கூட கூடாது, திரள கூடாது என்று காவல்துறை தடுக்கவே இல்லை, அவர்களை அப்புறப்படுத்துவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆனால் கொடியேற்ற போன தலித் மக்களை அங்கிருந்து விரட்டி அடித்தார்கள். இதனையெல்லாம் மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு சென்று இருக்கின்றோம். இதுகுறித்து பரிசீலிப்பதாக எங்களிடத்தில் கூறியிருக்கின்றார் என திருமாவளவன் தெரிவித்தார். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் எந்த ஆட்சி வந்தாலும் இப்படி தான் இருக்கும் என தெரிவித்தது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.