வகுப்பறைக்குள் கற்கள் மற்றும் செங்கல் வீசப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வடுகபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 231 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்களும், மாணவர்களும் வழக்கம்போல வகுப்பறைக்கு சென்றுள்ளனர். அப்போது வகுப்பறையில் கற்கள், செங்கல் வீசப்பட்டு கிடந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து கழிப்பறையில் இருக்கும் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க பள்ளி சுற்று சுவரின் உயரத்தை உயர்த்த வேண்டும் எனவும், இரவு நேர காவலர்களை நியமிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.