சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் சாலைகள் மற்றும் தாழ்வான குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம் அணையில் நீர் திறந்துவிடப்பட்டத்தால் அடையாறு ஆற்றில் நீர் வெள்ளம் போல் திரண்டு ஓடுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள திருவிக பாலத்திலன் கீழே அடையாறு ஆற்றில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று மிதந்து கிடந்தது.
இதையெடுத்து அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இதைக் கண்டு போலிசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர், அதன்பிறகு மயிலாப்பூர் தீயணைப்புத்துறையினர் ஆற்றில் மிதந்து வந்த ஆண் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இவர் யார்? என்றும், எப்படி இறந்தார்? என்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.