அதிமுகவில் ஜெயித்து எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும், அவரை வீடு புகுந்து வெட்டுவேன் என்று அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 இடங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முடிவுகள் பிப்ரவரி 22ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் வேறு கட்சிக்கு யார் மாறினாலும் அவரை வீடு புகுந்து வெட்டுவேன் என்று சர்ச்சையாக பேசினார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனிடம் சொல்லிவிட்டு வெட்டுவேன். எனது வெட்டு தான் முதல் வெட்டாக இருக்கும். யார் கட்சி மாறினாலும் அவரை வெட்டி விடுவேன். இதற்காக என் மீது வழக்கு பதிவு செய்தாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் கட்சி மாற நினைப்பவர்கள் மரணத்திற்கு தயாராகிக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடும் வகையில் சர்ச்சையாக பேசினார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.