யாழ்ப்பாணம் தீவில் கரை ஒதுங்கிய கடலில் மாயமான ராமேஸ்வர மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது இரவு கச்சத்தீவிற்க்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகில் இருந்து கார்சன் நிலைதடுமாறி நடு கடலில் விழுந்து மாயமானார். இதனையடுத்து ராமேஸ்வர மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் உதவியுடன் தமிழக கடற்பரப்பில் தீவிரமாக தேடினர். ஆனால் மாயமான மீனவர் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மதியம் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வேலணை பகுதிக்கு உட்பட்ட அள்ளப்பீட்டி வென்புற வினுநகர் கடற்கரையில் கார்சன் உடல் கரை ஒதுங்கியது. இந்நிலையில் யாழ்பாணத்தில் உள்ள மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.