பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள யாஷிகா ஆனந்த் இடம் மாமல்லபுரம் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது காரை ஓட்டி வந்தது யாஷிகா ஆனந்த் தான் என்பதும் மது அருந்திவிட்டு அவர் வாகனத்தை ஓட்ட வில்லை என்பதும் தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அதிவேகமாக காரை இயக்கியதால் விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது.
ஆனால் விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல்,அதிவேக வாகனத்தை இயக்குதல் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவரது ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து யாஷிகா ஆனந்த் குணமடைந்த பிறகு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.