யுபிஎஸ்சி பணிகளுக்கான தேர்வில், இந்திய அளவில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 7ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு, 2019 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வும், மார்ச் மாதத்தில் நேர்காணலும் நடைபெற்றது. ஆனால் கொரோனா பொது முடக்கம் காரணமாக நேர்காணல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அதற்கான நேர்காணல், கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் விடுபட்டவர்களுக்காக நடைபெற்று வந்தது. இன்று வெளியான தேர்வு முடிவில், நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் இந்திய அளவில் 7ஆம் இடமும், தமிழ்நாட்டில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். கணேஷ் குமார் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த புன்னை நகரைச் சேர்ந்தவர். மத்திய அரசின் அமைச்சரவை செயலகத்தில் துணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.
இவர் படைத்த சாதனை குறித்து அவர் கூறுகையில், ” மத்திய பாடத் திட்டத்திலேயே 12ஆம் வகுப்பு வரை படித்தேன். 10ஆம் வகுப்பு ஹரியானாவிலும், 12ஆம் வகுப்பு மதுரை கேந்திர வித்யாலயாவில் படித்தேன். பி.டெக் கான்பூரிலும், எம்.பி.ஏ., அகமதாபாத்திலும் முடித்துள்ளேன். பின்னர் அகமதாபாத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். அப்போது இந்தியன் பாரின் சர்வீஸ் பணியில் சேர வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து மத்திய அரசால் நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தேன். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் முயற்சித்து வெற்றி பெற முடியவில்லை.
இதனால், எனது வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமாக வீட்டிலிருந்து படிக்க தொடங்கினேன். இதற்கு எனது பெற்றோர் முழு ஆதரவு அளித்தனர். யுபிஎஸ்சி தேர்விற்குப் பிரத்யேக பயிற்சி வகுப்பிற்கு எதுவும் செல்லவில்லை. வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் வகுப்பைப் பின்பற்றி மட்டுமே படித்தேன். தேர்வு நடைபெறுவதற்கு 2 மாதத்திற்கு முன்பே தேர்வுக்கு தயாரானேன். நான் 100 இடங்களுக்குள் கிடைக்கும் என்றுதான் நினைத்தேன். இந்திய அளவில் ஏழாம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் இருப்பவர்கள் இத்தேர்வில் வெற்றி பெறலாம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.