யூடியூப் வீடியோவை பார்த்து கொள்ளையடிக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள நிலவாரப்பட்டி கிராமத்தில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அலாரம் ஒலித்ததால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மானியகாடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து விஜயகுமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் நகை கடையில் ஊழியராக வேலை பார்த்த விஜயகுமார் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து எவ்வாறு கொள்ளையடிப்பது என்பதை யூட்யூபில் பார்த்துள்ளார். அதே முறையில் கொள்ளையடிக்க முயற்சி செய்த போது அலாரம் ஒலித்ததால் விஜயகுமார் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விஜயகுமாரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.