யெஸ் பேங்க் நிர்வாகம் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் அதன் வாடிக்கையாளர்களுக்கு பண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ப. சிதம்பரம் ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கியின் நிதிநிலை படு மோசமாக உள்ளது. கடன்களை வசூலிக்க முடியாமல் தள்ளாடும் யெஸ் வங்கி, மூலதன நிதியை திரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த வங்கியை மீட்கும் வகையில் இதன் பங்குகளை வாங்குமாறு பாரத ஸ்டேட் வங்கியை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், எஸ்பிஐயும், எல்ஐசியும் இணைந்து 49 சதவீத பங்குகளை வாங்க வாய்ப்புகள் உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியின் பங்குகள் மதிப்பு 60% வீழ்ச்சி அடைந்துள்ளது. யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் 50,000க்கு மேல் எடுக்க தடை விதித்து நிதியமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், நிதித்துறை நிறுவனங்களை நிர்வகித்து ஒழுங்குப்படுத்தும் திறன் மத்திய பாரதா ஜனதா அரசுக்கு இல்லை என்பது அம்பலமாகிவிட்டதாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் பாஜக அரசின் திறமையின்மை அம்பலமாகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து இந்த அரசாங்கத்திற்கு அக்கறை இருக்கிறதா? அல்லது அதன் பொறுப்பில் இருந்து விலகுகிறதா? இந்த வரிசையில் முதலில் பி.எம்.சி. வங்கி, தற்போது யெஸ் வங்கி, 3-வது எதுவோ? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.