சென்னை சாலி கிராமத்தை சேர்ந்த மதுராஜ் சினிமாப்பட விநியோகஸ்தர் ஆவார். இவர் விருகம்பாக்கம் ஏவிஎம் அவின்யூ பகுதியில் அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் போரூர் பகுதியை சேர்ந்த கோபி, பென்சீர் போன்றோர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்த “ஷூ” என்ற படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடவும், சேட்டிலைட் உரிமம் போன்றவற்றை ரூபாய்.1கோடியே 10 லட்சத்துக்கு பேசி ரூ.17 லட்சம் முன்பணம் கொடுத்து, மீதம் உள்ள தொகையை 2 தவணைகளாக 90 நாட்களுக்குள் கொடுத்துவிடுவதாக மலேசியாவை சேர்ந்த பட தயாரிப்பாளரிடம் மதுராஜ் ஒப்பந்தம் போட்டுள்ளார். அதே நேரம் மதுராஜ் தன் மனைவியின் பிரசவத்துக்காக சொந்த ஊரான மதுரைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக அவர் கூறியபடி தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க கால தாமதம் ஆகிவிட்டது. இதனால் மதுராஜ் மற்றும் தயாரிப்பாளர் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் சென்ற 1ஆம் தேதி மதுராஜ் அலுவலகத்திற்குள் புகுந்த 13 பேர் கொண்ட மர்மகும்பல் அங்கு இருந்த ஊழியர்கள் கோபி, பென்சீர் ஆகிய 2 பேரையும் சரமாரியாக அடித்து உதைத்து கத்திமுனையில் காரில் கடத்தி சென்றனர். அதன்பின் தாம்பரம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்துவைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவர்கள் ATM கார்டு மற்றும் செல்போன்களையும் பறித்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து ஊழியர்களை தாம்பரம் ரயில் நிலையம் அருகில் இறக்கிவிட்டு மிரட்டல் விடுத்து தப்பி சென்று விட்டனர்.
அத்துடன் அவர்கள் ATM கார்டு வாயிலாக ரூபாய்.70 ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர். இது தொடர்பாக தகவலறிந்த வினியோகஸ்தர் மதுராஜ் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த கடத்தல் குறித்து தாம்பரம் அருகில் பதுங்கியிருந்த நாகராஜ், வினோத்குமார், சொக்கலிங்கம், பிரசாந்த் உள்ளிட்ட 4 பேரை இன்று அதிகாலை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைதுசெய்தனர். அத்துடன் தப்பியோடிய நபர்களை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். கைதான நாகராஜ், வினோத் குமார் இருவரும் வக்கீல்கள் என்பதும், சொக்கலிங்கம் கல்லூரி மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. தற்போது அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.