சிலை விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அம்மன் சிலை ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையம் அருகே கோவில் சிலைகள் விற்பனை நடப்பதாக சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், முருகபூபதி மற்றும் காவல்துறையினர் பேருந்து நிலையம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் கீழக்கரையை சேர்ந்த பாக்யராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் சுமார் 7 கிலோ எடை, 1 அடி உயரம் கொண்ட உலோகத்தால் ஆனா அம்மன் சிலை ஒன்று இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் பாக்கியராஜை உடனடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி சிலை விற்பனையில் உடந்தையாக இருந்த ராமநாதபுரம் சினஞானபுறம் வ.வு.சி நகரில் வசிக்கும் மணிகண்டன் என்பவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.