திருநங்கைகள் அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் பேருந்து நிலையத்திலிருந்து நள்ளிரவு 1 மணிக்கு அரசு பேருந்து ஒன்று திருச்சி செல்வதற்காக தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் ஏறிய திருநங்கை பயணிகளிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் பேருந்திலிருந்து கீழே இறங்கவில்லை. இதனால் ஓட்டுநரும், கண்டக்டரும் இணைந்து பேருந்து புறப்படும் நேரம் ஆகிவிட்டது. எனவே கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனாலும் அந்த திருநங்கை கீழே இறங்காமல் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை திட்டியுள்ளார்.
இதனையடுத்து பயணிகளும் ஓட்டுநர் மற்றும் கண்டக்டருக்கு ஆதரவாக திருநங்கையை திட்டி இறங்கும்படி கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து திருநங்கை செல்போன் மூலம் தனக்கு தெரிந்தவர்களுக்கு கூறியுள்ளார். இதனையடுத்து 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சிலரை ஆபாசமாக திட்டியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து திருநங்கைகள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தின் முன் மற்றும் பின் பக்க கண்ணாடிகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் கரூர் பேருந்து நிலையம் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் 8-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.