அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரின் சொந்த ஊர் மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரின் சொந்த ஊர் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம். கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தா,பாட்டி மன்னார் குடியை சேர்ந்தவர்கள். அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை கொண்ட பெண் போட்டியிடுவதால், அவரின் சொந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
அமெரிக்காவில் தேர்தல் முடிவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், துளசேந்திரபுரம் கிராம மக்கள் அனைவரும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் சிலர் தங்கள் வீடுகளின் முன்பு ரங்கோலி வரைந்து கமலா ஹாரிஸ் வெற்றி பெற தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிகண்டு தங்களை சந்திக்க வருவார் என்று அம்மக்கள் அனைவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.