வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகி இருக்கிறது. பொங்கல் அன்று இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அன்றைய தினம் ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆகவே நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “எண்ணற்ற தெலுங்கு படங்கள் தமிழகத்தில் எந்தவித தடையும் இன்றி வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் படங்கள் வெளியாவதற்குக் கெடுபிடி விதித்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத் தவறான முன் உதாரணமாகும்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா என 3 மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினருக்கு புகலிடமாக விளங்கிய தமிழ்த் திரையுலகை வஞ்சிக்கும் இந்த போக்கு கடும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டுக்கு எதிரான தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவை உடனே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதை செய்ய தவறும் பட்சத்தில் தெலுங்குத் படங்களை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என வன்மையாக எச்சரிக்கிறேன்” என குறிப்பிட்டு உள்ளார்.