நடிகர் ரஜினியை அரசியலுக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தி ரசிகர்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஜினி அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்துவதுதற்காக போராட்டங்களில் ஈடுபட போவதாக சில ரசிகர்கள் பேசிவருவது அவரை மேலும் நோகடிக்க செய்யும் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த போராட்டத்திற்காக ஒரு சிலர் அதற்கான செலவுகளுக்கு என்று கூறி நிதி வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நம் தலைவரின் மீது அன்பும், அவர் நலனில் அக்கறையும் கொண்ட நம் ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் மற்றும் ரசிகர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.