தேள் படத்தில் தனக்கு நடன காட்சியே இல்லை என பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. தற்போது இவர் நடிப்பில் தேள் படம் உருவாகியுள்ளது. ஹரிகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபுதேவாவுக்கு அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சத்யா.சி இசையமைத்துள்ளார். இந்நிலையில் தேள் படம் குறித்து பேசிய பிரபுதேவா, ‘இயக்குனர் ஹரியும், நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். நாங்கள் இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். தற்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தனது திறமையை நிரூபிக்கவுள்ளார்.
இந்த படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என் படத்தில் ரசிகர்கள் நடனத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால் தேள் படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. இந்த படத்தில் முதல்முறையாக நான் இடதுகை பழக்கம் கொண்டவனாக நடித்துள்ளேன். நான் என் வழக்கமான நடிப்பை நடிக்கிறேனா என இயக்குனர் என்னை செக் செய்து கொண்டே இருப்பார். அதுபோல் நடித்தால் உடனே அதை மாற்றிவிடுவார். மிகச் சிறந்த தமிழ் நடிகைகளில் ஒருவராக ஈஸ்வரி திகழ்கிறார். மிக பப்ளியான அழகான நடிகையாக சம்யுக்தா மிளிர்கிறார். இந்த படத்தில் அவரது நடிப்பு முக்கிய அம்சமாக இருக்கும். மேலும் இந்த படம் மிக அழுத்தமான படைப்பாக, அனைவருக்கும் பிடிக்கும் படைப்பாக இருக்கும்’ என கூறியுள்ளார் .