Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரசித்து பார்த்த கோலி….. “யுவராஜ் சிங் மாதிரி 6 சிக்ஸர் அடிக்க பார்த்தேன்”….. சொல்லி சிரித்த சூர்யகுமார்…!!

யுவராஜ் சிங்கை போல 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆசியக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர்-4 சுற்றுக்குள் நுழைந்தது.

இப்போட்டி இந்திய ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். இதில் அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 6 சிக்சர் 6 பவுண்டர்கள் என  26 பந்துகளில் 68 ரன்களை விளாசி தள்ளினார். அதேபோல இவருக்கு உறுதுணையாக விராட் கோலியும் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். சமீப காலமாக பார்ம் இல்லாமல் தவித்த கிங் கோலி இந்த ஆட்டத்தில் அற்புதமாக ஆடி 44 பந்துகளில் 59 ரன்கள் (3 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்தார். குறிப்பாக சூரியகுமார் யாதவ் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் பிரமிக்க வைத்திருப்பார். சூர்யாவின் இந்த ஆட்டத்தை கோலியே ரசித்து பார்த்தார்.

இதையடுத்து போட்டி முடிந்த பின் பெவிலியனை நோக்கி சூர்யகுமார் சென்றபோது, விராட் கோலி தனது நெஞ்சில் கையை வைத்து அவருக்கு சிரம் தாழ்த்தி வணங்கி கை கொடுத்து மரியாதை செய்தார். உலகின் தலைசிறந்த வீரரான கோலி வளர்ந்து வரும் சூர்யகுமாருக்கு மரியாதை கொடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி பாராட்டுக்களை பெற்றது.

இது குறித்து பேசிய சூர்ய குமார் யாதவ், விராட் கோலியின் செயலால் நான் நெகிழ்ந்து விட்டேன். இதற்கு முன்னதாக இப்படி ஒரு அனுபவத்தை நான் கண்டதில்லை. இன்னிங்ஸ் முடிந்த பின் எனக்கு முன்னால் அவர் நடந்து செல்லாமல் நின்று கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தேன்.. அதன்பின் அவர் இருவரும் சேர்ந்து செல்வோம் என என்னிடம் தெரிவித்தார். அவருடன் சேர்ந்து பேட்டிங் ஆடுவது எனக்கு மிகப் பிடிக்கும். அடுத்தடுத்து பந்துகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி நிறைய பேசினோம். விராட் கோலியுடன் டி20 போட்டிகளில் அதிகம் இணைந்து விளையாடியது கிடையாது. தற்போது கிடைத்திருக்கும் இந்த அனுபவம் மிக முக்கியமான ஒன்று என அவர் கூறினார்.

 

மேலும், இந்த போட்டியில் நான் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிக்க முயற்சி செய்தேன்.. முதல் மூன்று பந்துகளில் சிக்சர் அடித்த என்னால் 4ஆவது பந்தில் அடிக்க முடியவில்லை.. அதனால் யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்ய முடியவில்லை என சொல்லி சிரித்தார்.. என்னைப் பொருத்தவரை எந்த இடத்தில் களமிறங்கி விளையாடினாலும் சிறப்பாக ஆட வேண்டும் என்பதை மட்டுமே நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

Categories

Tech |