தாதாசாகேப் பால்கே விருது ரஜினிக்கு 100 சதவீதம் பொருந்தும் என்று கூறி கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. இதனை நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் பெற்றுள்ளார்.
இந்திய சினிமாவின் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி தமிழ் திரையுலகம் மட்டுமன்றி ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட ரஜினிக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்ற எடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100 சதவீதம் பொருந்தும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.