டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் நாவல் டாடா என்ற ரத்தன் டாடாவை நம் நாட்டில் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் சிறந்த கொடை வள்ளல் என பல முகங்களை கொண்டவர் ரத்தன் டாடா. இப்படிப்பட்ட அவர் உள்ளேயும் ஒரு அழகிய காதல் இருந்துள்ளது. அந்த காதலை ரத்தன் டாடாவே ஒரு நிகழ்ச்சியில்கூறியுள்ளார். தனது காதல் குறித்து ரத்தன் டாடா கூறுகையில், கல்லூரி படிப்பை முடித்த பிறகு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தில் 2 வருடங்கள் பணியாற்றினேன். இது ஒரு சிறந்த நேரம், சூழ்நிலை அழகாக இருந்தது. எனக்கு சொந்தமாக கார் இருந்தது. எனது வேலையை நேசித்தேன்.
அந்த நகரில் தான் நான் ஒரு பெண்ணை காதலித்து கிட்டத்தட்ட திருமணம் செய்யும் நிலைக்கு வந்தேன். அதேசமயம் சுமார் 7 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாத பாட்டியிடமிருந்து விலகி இருந்ததால் குறைந்தபட்சம் தற்காலிகமாக திரும்பி செல்ல முடிவு எடுத்தேன். அதனால் நான் என் பாட்டியை பார்க்க திரும்பி வந்தேன். நான் காதலித்த பெண் என்னுடன் இந்தியாவுக்கு வருவார் என்று நினைத்தேன். ஆனால் 1962 இந்தியா-சீனா யுத்தம் காரணமாக அவளுடைய பெற்றோருக்கு சம்மதம் இல்லை. இதனால் அந்த அப்படியே காதல் முறிந்தது என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் அந்த பெண்ணின் நினைவில் இருந்து மீளாமல் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.