மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் பாஜக சார்பில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இந்த பொங்கல் கொண்டாட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனால், மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா நடைபெறுமா என சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா தள்ளிவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மற்றொரு நாளில் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் காரணமாக பொங்கல் விழா ரத்து செய்யப்படுகிறது. பின்னர் வேறு ஒரு தேதியில் விழா நடத்தப்படும். அதற்கான தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.