தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் விலை உயர்ந்த ரபேல் கைக்கடிகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி வெறும் நான்கு ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தன்னுடைய சொத்து எனக் கூறிய அண்ணாமலை சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் கைக்கடிகாரத்தை வாங்கியது எப்படி? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் கைக்கடிகாரம் வாங்கியதற்கான ரசீதை அண்ணாமலையால் வெளியிட முடியுமா? எனவும் அவர் கேட்டுள்ளார். இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாவது, “கடிகாரத்தின் ரசீது மற்றும் என் வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள் சமர்ப்பிக்கின்றேன். கடந்த ஆகஸ்ட் 2011 -ஆம் வருடம் ஐ.பி.எஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் எனக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்கள் என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையும் நான் விரைவில் வெளியிடுவேன்” என கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் நான் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறேன். அந்த பாதயாத்திரையின் முதல் நாளில் அனைத்து தகவல்களையும் வெளியிடுவேன். நான் அறிவித்ததை விட அதிகமாக ஒரு பைசா சொத்தை யாரேனும் கண்டுபிடித்தாலும் எனது சொத்துக்கள் அனைத்தையும் நான் அரசிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறேன்” என கூறியுள்ளார். அதேபோல “வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களையும் தி.மு.க-வினர் மற்றும் தி.மு.க தலைவர்கள் வெளியிட தயாராக உள்ளதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.