ரப்பர் தொழிலாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நாகர்கோவிலில் நேற்று காலை வனத்துறை மற்றும் ரப்பர் கழக அதிகாரிகளுடன் திடீரென்று கலந்தாய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தற்போது மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து வனத்துறை சார்ந்த பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறேன். தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் கிடைக்கும் லாபத்தை தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது.
இலக்கை எட்டுவதற்கு தொழிலாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அரசு ரப்பர் கழக அதிகாரிகள் தவறு இழைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான தீர்வு காணப்படும். தமிழக முதல்வரின் தனி திறமையால் தான் தமிழகத்தில் தொற்று குறைந்து வருகின்றது. எதிர்காலத்தில் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது” ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.