கர்நாடகாவில் ரம்ஜான் பண்டிகையின் போது கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுரா அரசு பி.யூ.கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்தனர். இதனால் கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு இறுதி உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளை யாரும் அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஹிஜாப் அணிந்து சென்றால் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் பல முஸ்லிம் பெண்கள் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே படிப்பை நிறுத்திவிட்டு இருகின்றனர். தற்போது ரம்ஜான் பண்டிகையின் போது கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடக கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர். ஹூப்ளியை சேர்ந்த மனநல மருத்துவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில் இந்த “ஹிஜாப் விவகாரம் அனைவரது மத்தியிலும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதை கருத்தில் கொண்டு ரம்ஜான் பண்டிகை வருவதை ஒட்டியும் வெள்ளிக்கிழமைகளிலும் ரம்ஜான் பண்டிகை காலத்திலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இம்மானுவை நீதிபதிகள் அமர்வு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.