ரம்மி விளையாட்டில் மகன் பணத்தை இழந்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் பூ வியாபாரியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வகுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கி செல்போனில் ரம்மி விளையாடி தோல்வியடைந்தார். மேலும் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் சிரமப்பட்ட செல்வகுமார் இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து மன உளைச்சலில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மாரிமுத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாரிமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.