சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த வெளிமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தனிப்படை காவல்துறையினர் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் டெல்லியை சேர்ந்த ராஜ்குமார் என்பதும், ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. அதன்பின் ராஜ்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.