ரயிலில் சிவனுக்கு படுக்கை வசதியுடன் இருக்கை ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஐ.ஆர்.டி.சி. மறுப்பு தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காசி விஸ்வ நாதர் கோவில், மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவில், உஜ்ஜயினியில் உள்ள மஹாகாளேஷ்வர் கோவில் ஆகிய மூன்று ஜோதிர்லிங்க தலங்களையும் இணைக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அந்த ரயிலில் காசி தொடங்கி உஜ்ஜயினி வரை பயணிக்க 1,951 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிறப்புமிக்க அந்த ரயிலில் சிவபெருமானுக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. 64 வடிவங்களைக் கொண்ட சிவனுக்காக ‘பி – 5’ பெட்டியில், 64வது இருக்கையை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கி உள்ளது. சிவனின் படங்கள், பூக்கள், காகித மாலைகள் ஆகியவற்றுடன் அந்த இருக்கை சிறிய கோவில் போல காட்சியளித்தது.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில், ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பின. ஆனால் இதனை ஐ.ஆர்.சி.டி.சி. மறுத்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஐ.ஆர்.சி.டி.சி., ரயிலில் சிவனுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. ரயிலின் தொடக்க ஓட்டம் எந்த தடங்கலும் இல்லாமல் தொடர சிவன் புகைப்படத்தை வைத்து பூஜை செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.