ரயிலில் சென்று கொண்டிருந்த உதவி அலுவலர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்துள்ள ஆயிபளையத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஆண் நபர் ஒருவரின் உடல் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக வெண்ணந்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவர் கமுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் சம்பவதன்று சக்திவேல் அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்களுடன் சென்னையில் இருக்கும் தலைமை செயலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்ப்பு அலுவலகத்திற்கு செல்வதற்காக மதுரையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ரயிலில் சென்று கொண்டிருத்த சக்திவேல் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.