நகைகளைத் திருடிவிட்டு ரயிலில் தப்பிய திருடனை அவனுக்கு முன்னால் விமானத்தில் சென்று பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூருவில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் மெஹக் வி பிராகல் (Mehak V Piragal’s) வீட்டை ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த குஷால் சிங் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுத்தம் செய்வதற்கு வந்துள்ளாளார் .
மெஹக் தனது குடும்பத்தினருடன் துணிக்கடைக்குச் செல்லும்போது குஷால் சிங்கிடம் வீட்டை சுத்தம் செய்யச் சொல்லிச் சென்றுள்ளார். இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வீட்டின் லாக்கரிலிருந்த நகைகளைத் திருடியுள்ளார். பின்னர் மெஹக் குடும்பத்தினருக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படக்கூடாது என்பதற்காகக் குஷால் வீட்டை முழுவதும் சுத்தம் செய்துவிட்டு தனது ஊருக்குச் சென்றுவிட்டார்.அதன்பின், தீபாவளி திருநாளில் வழிபாட்டிற்காக நகைகளை எடுப்பதற்கு லாக்கரை திறந்தபோதுதான் நகைகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், குஷால் தனது கிராமத்திற்கு பெங்களூரு- அஜ்மர் ரயிலில் செல்வதைக் கண்டுபிடித்துள்ளனர். குஷால் செல்லும் ரயில் ராஜஸ்தான் செல்வதற்கு மூன்று நாள்கள் ஆகும் என்பது தெரிந்ததும், உடனடியாக விமானத்தில் ராஜஸ்தான் சென்ற பெங்களூரு காவல் துறையினர், பசவனகுடி காவல் நிலையத்தில் விவரங்களைச் சொல்லி வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பின், குஷால் சென்ற ரயில் ராஜஸ்தான் வந்தடைந்தபோது, அவரை வரவேற்கப் பெங்களூரு காவல் துறையினர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் காவல் துறையினர் நகைகளைக் குஷாலிடமிருந்து மீட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறை அலுவலர் கூறுகையில், “குஷால் பெங்களூரு வருவது இதுவே முதல் முறையாகும். அவர் மீது குற்றப்பதிவு எதுவும் இதுவரை இல்லை. அவர் வேகமாகப் பணம் சம்பாதித்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பியதால்தான் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் அவர் நகைகளைத் தனது ஊரில் விற்பனை செய்துகொள்ளலாம் என முடிவு செய்து கொண்டுவந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.