நூதன முறையில் செல்போனை திருடி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி(21) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவசங்கரி நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு பயணிகள் ரயிலில் செல்வது வழக்கம். நேற்று ரயிலில் சிவசங்கரி வேலைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் அருகில் ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அந்த வாலிபர் நான் இரணியலில் இறங்க வேண்டும். எனது உறவினர் வீடு இங்கு இருக்கிறது என கூறியுள்ளார்.
மேலும் சார்ஜ் இல்லாமல் எனது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. எனவே உறவினரை அழைக்க உங்களது செல்போனை தருவீர்களா? என அந்த நபர் கேட்டுள்ளார். இதனை நம்பிய சிவசங்கரி செல்போனை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் வாலிபர் 15000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து சிவசங்கரி நாகர்கோவில் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.