மின்சார ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கி சிறுவன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள எருக்கஞ்சேரி பகுதியில் பெயிண்டரான கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதுடைய பச்சையப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் வேடந்தாங்கலில் இருக்கும் தனது தாத்தா ராஜேந்திரனுடன் சென்னை கடற்கரை சென்ற மின்சார ரயிலில் தனது வீட்டிற்கு பயணித்துள்ளார். இந்நிலையில் ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு தாத்தாவும், பேரனும் கீழே இறங்கி சிறுநீர் கழித்துள்ளனர்.
அப்போது ரயில் புறப்பட்டதால் பதற்றத்தில் தாத்தாவும், பேரனும் ரயிலில் ஏறுவதற்காக ஓடி சென்ற போது நிலைதடுமாறி விழுந்த சிறுவன் நடைமேடைக்கும், மின்சார ரயிலுக்கும் இடையில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.