தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதலே இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சென்னை பேசின் பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் பெரம்பூர், திருவள்ளூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. விரைவு ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ஆலப்புலா ரயில் இரவு 10.55-மணிக்கு பதில் இரவு 12.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல் மேட்டுப்பாளையம் ரயில் இரவு 9.05 மணிக்கு பதில் இரவு 10.15 மணிக்கும், சென்ட்ரல் -புது டெல்லி ரயில் மாலை 6.50 மணிக்கு பதில் இரவு 9.30 மணிக்கு புறப்படும்.சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.