தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடைவிடாது கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் இன்று மின்சார ரயில்கள் இயக்கப்படுமா என்று பயணிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது.
இதையடுத்து சென்னையில் கன மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை இரு மார்க்கத்திலும் இன்று வழக்கம்போல் இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் எந்த ரயிலும் ரத்து செய்யப்படவில்லை, அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.