மேற்கு வங்கத்தில் ஹௌராவில் இருந்து நியூ ஜல்பாய்குரிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் நியூ ஜல்பாய்குரி ரயில்வே மறு சீரமைப்பு திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள ரயில்வே நிலைய வழித்தடங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயனளிக்கக்கூடியவை என தெரிவித்தார். இதற்கிடையில் பிரதமர் மோடி பேசியதாவது “வந்தே மாதரம் முழக்கம் உருவான இடத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் ரயில் சேவை துவங்கப்பட்டு உள்ளது.
இந்த ரயில் சேவையானது டிசம்பர் 30ம் தேதியில் தொடங்கப்படுவதில் முக்கியத்துவம் இருக்கிறது. ஏனெனில் இதே நாளில் 1943ம் வருடம் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அந்தமான் மற்றும் நிகோபார் தீவில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். 21ம் நூற்றாண்டில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ரயில்வே துறையின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தப் பணிகள் மிகவும் முக்கியம் ஆகும்.
ரயில்வே துறையை மேம்படுத்த நாடு முழுவதும் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. மக்களின் தடையற்ற மற்றும் வேகமான பயணத்துக்காக நாடு முழுவதும் புது விமான நிலையங்கள், நீர் வழித்தடங்கள், துறைமுகங்கள் மற்றும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்வே துறையை நவீனப்படுத்த மத்திய அரசு மாபெரும் முதலீட்டினை மேற்கொண்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.