அண்மையில் ரயில்வே வாரியம் நடத்திய தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு பீகார் மாநிலத்தில் பெரிய கலவரம் வெடித்தது. ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாறுவதாக ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் ரயில்வே பணியில் சேர விரும்புபவர்கள் மோசடியாளர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தென்னக ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே பணிகளில் சேர அதிகாரப்பூர்வமாக 21 ரயில்வே பணியாளர் தேர்வாணையங்கள்(ஆர்.ஆர்.பி.) மற்றும் 16 ரயில்வே பணியாளர் தேர்வு முகமைகள் (ஆர்.ஆர்.சி.) மூலம் மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது. இவற்றை தவிர வேறு எந்த நிறுவனமும் ஆட்களை தேர்வு செய்வதில்லை. வேலைவாய்ப்புக்கான தேர்வுகள் குறித்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ரயில்வே தேர்வாணையங்களின் இணையதளத்திலும் வெளியிடப்படுகின்றன.
எனவே ரயில்வே பணியில் சேருவதற்காக இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரேனும் ரயில்வேயில் வேலைவாங்கி தருவதாக கூறி விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையம் அல்லது 044 23213185 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.