பலருக்கும் ரயிலில் பயணம் செய்வது இனிமையான அனுபவத்தை கொடுக்கும். மேலும் விமானம், பேருந்து போக்குவரத்தை ஒப்பிடும் போது ரயிலில் தான் குறைந்த விலையில் பயணிக்க முடியும். இருப்பினும் சிலர் ரயில் போக்குவரத்தை தேர்ந்தெடுக்காததற்கு காரணம் டிக்கெட் பெறுவதற்காக கவுண்டரில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்பதால் தான். அதிலும் அன்றாடம் படிப்புக்காகவும், வேலைக்காகவும் ரயில் பயணம் செய்பவர்கள் கவுண்டரில் வெகுநேரமாக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனை தவிர்ப்பதற்காகவே தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் கவுண்டரில் டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் கிடையாது. இருப்பினும் இந்த முறையில் கூட கூட்ட நெரிசலை தவிர்க்க முடியவில்லை. எனவே தெற்கு ரயில்வே தற்போது புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி QR கோடு தொழில்நுட்ப வசதியுடன் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த முறையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரயில்வே பயணிகள் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் வசதியை தற்போது விரிவுபடுத்தி வருகிறோம். அந்த வகையில் QR கோடு மூலம் நடைமேடை கட்டணம், ஏடிவிஎம் ( தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் ) டிக்கெட் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பிஎச்எம் யுபிஐ QR கோடு, ரயில்வே ஸ்டோர்ட் கார்டு, பிஎச்எம் யுபிஐ கோடு, பேடிஎம் வழியாகவும் கட்டணம் செலுத்த முடியும். இதுகுறித்த முழு விவரத்தையும் தானியங்கி டிக்கெட் இயந்திரங்களின் திரையில் காணும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 139 என்ற எண்ணை தொடர்பு கொண்டு இதுகுறித்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். அதோடு மட்டுமில்லாமல் QR முறையில் டிக்கெட் பெறுவோருக்கு 0.5 % கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.