தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிர்வாக வசதிக்காக 9 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், விசாகப்பட்டினம் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள் (எண். 02007/02869) இன்று முதல் காலை 7.50 மணிக்கு சென்னைக்கு வரும் எனவும், புவனேஸ்வர் – சென்னை சென்ட்ரல் (02839) ரயில் ஜூலை 22ஆம் தேதி முதல் காலை 7.50 மணிக்கும், பிலாஸ்பூர் – சென்னை சென்ட்ரல் (08231) சிறப்பு ரயில் இன்று முதல் காலை 7.50 மணிக்கும் வந்தடையும்.
திருப்பதி – சென்னை சென்ட்ரல் ரயில் (06096) இன்று முதல் இரவு 10.05 மணிக்கும், மைசூர் – சென்னை சென்ட்ரல் ரயில் (06022) காலை 6.45 மணிக்கு சென்னை வரும், ஜோலார்பேட்டை – சென்னை சென்ட்ரல் ரயில் (06090) காலை 9.10 மணிக்கும் சென்னைக்கு வரும். மேலும் சென்னை சென்ட்ரல் – நிஜாமுதீன் ரயில் (06151) செப்டம்பர் 4ஆம் தேதி முதல் காலை 6 மணிக்கும், சென்னை சென்ட்ரல் – நிஜாமுதீன் (02269) சிறப்பு ரயில் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் காலை 6.45 மணிக்கும் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.