ரயில் பயணம் என்பது பாதுகாப்பான மற்றும் மிககுறைந்த விலையில் போகக்கூடிய ஒரு பயணமாக கருதப்படுகிறது. அத்தகைய ரயில் பயணங்களுக்கு வருடத்தில் ஒருசில தினங்களுக்கு டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம் ஆகும். எனினும் குறிப்பிட்ட நாட்களுக்கு மேற்கொள்ள வேண்டிய ரயில் பயணத்திற்கு 2-3 மாதங்களுக்கு முன்பே பதிவுசெய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு முன்பதிவு செய்த ரயில் பயணம் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட வேண்டிய சூழல் வரும். அந்த சூழ்நிலையில் உங்கள் ரயில் டிக்கெட்டை மற்றொரு நபருக்கு மாற்றிக்கொள்ளலாம்.
அதுகுறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். இந்திய ரயில்வே விதிகளின்படி கடைசி நேரத்தில் உங்கள் ரயில் பயணம் ரத்துசெய்யப்பட்டால், டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றலாம். இருப்பினும் இந்த பரிமாற்றம் குடும்ப உறுப்பினர்களான பெற்றோர், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன், மனைவி இடையில் மட்டுமே மேற்கொள்ள முடியும். அவர்களைத் தவிரத்து உங்களது டிக்கெட்டை வேறு யாருக்கும் மாற்ற முடியாது.
வழிமுறைகள்
# முதலில் டிக்கெட்டின் பிரிண்ட்அவுட் எடுக்க வேண்டும்.
# டிக்கெட் கவுண்டரில் வாங்கிய டிக்கெட் எனில் அதை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
# அதன்பிறகு உங்கள் அருகில் உள்ள ரயில்வே முன் பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும்.
# யாருடைய பெயரில் டிக்கெட்டை மாற்ற விரும்புகிறீர்களோ, அசல் ஆதார் (அல்லது) வாக்காளர் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
# அத்துடன் அவற்றின் புகைப்பட நகலையும் வைத்திருக்கவும்.
# பின் கவுண்டரில் விண்ணப்பித்து டிக்கெட் பரிமாற்றத்தினைக்கோருங்கள். விண்ணப்பத்துடன் ஆதார்நகலை இணைக்க மறக்காதீர்கள்.
எப்போது டிக்கெட் மாற்றலாம்?..
ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு அருகில் உள்ள ரயில்வே முன் பதிவு மையத்திற்குச் சென்று உங்களின் டிக்கெட் பரிமாற்ற விண்ணப்பத்தைக் கொடுக்கவேண்டும். இந்த விண்ணப்பத்துடன் நீங்கள் ரயிலில் உங்கள் இடத்திற்கு அனுப்ப விரும்பும் நபரின் ஆதார் அட்டையின் புகைப்பட நகலையும் இணைக்கவேண்டும். உங்களிடம் குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை இல்லை எனில், வாக்காளர் அட்டையையும் எடுத்துக்கொள்ளலாம். அதன்பின் உங்களது பெயரிலுள்ள டிக்கெட் ரத்துசெய்யப்பட்டு, குடும்ப உறுப்பினர் பெயரில் டிக்கெட் எடுக்கப்படும்.