ஒடிசாவை சேர்ந்த மோகன் பதான் என்பவரின் மகள் மேகா ஸ்ரீ (30). இவர் டெல்லியில் எம்.டெக்., பி.எச்டி., முனைவர் பட்டப் படிப்பை படித்தவர் ஆவார். இந்நிலையில் மேகா ஸ்ரீ சென்னை அடையாறு ஐஐடி-யில் 3 மாத ஆராய்ச்சிபடிப்பு பயிற்சிக்காக வந்ததாக தெரிகிறது. அதன்படி அடையாறு கல்லூரி விடுதியில் தங்கி ஆராய்ச்சி படிப்பை படித்துக் கொண்டிருந்த மேகா ஸ்ரீ, நேற்று காலை ஆவடி-இந்துக் கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளத்தில் தலையில் காயத்துடன் ரத்தவெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையில் தண்டவாளத்தில் பணிசெய்து கொண்டிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் இளம்பெண் இறந்து கிடப்பதை பார்த்து ரயில்வே காவல்துறையினருக்கு உடனே தகவல் கொடுத்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் இறந்துகிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து இளம்பெண் தொடர்பாக தீவிரமாக விசாரித்ததில், அவரது கழுத்தில் அணிந்திருந்த அடையாள அட்டையை வைத்து அவர் யார்..? என்பதை அடையாளம் கண்டனர். அத்துடன் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆவடி ரயில்வே காவல்துறையினர் ஓடும் ரயிலில் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மாணவி மேகா ஸ்ரீ இறந்தாரா..? (அல்லது) வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்