ரயில்வே நிலையத்தில் மின்தூக்கி எக்ஸ்லேட்டர்கள் கூடிய விரைவில் அமைக்கப்பட உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் இருந்து 30 பயணிகள் ரயில் தினமும் செல்கிறது. இதில் தர்மபுரி-பெங்களூரு, எர்ணாகுளம்- பெங்களூரு, சேலம்- எஸ்வந்த்பூர், கொச்சுவேலி- எஸ்வந்த்பூர், நாகர்கோவில்- பெங்களூரு, புதுச்சேரி- எஸ்வந்த்பூர், நாகர்கோவில்- பெங்களூரு, கண்ணூர்- எஸ்வந்த்பூர், தூத்துக்குடி-மைசூர், மயிலாடுதுறை- மைசூர், கோவை- மும்பை, மயிலாடுதுறை-தாதர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் செல்கிறது. இந்நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். இந்த பயணிகள் ரயில் 2-வது நடைமேடையில் நிற்கிறது. இந்த நடைமேடைக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு படிக்கட்டின் வழியாக செல்ல வேண்டியிருக்கிறது.
இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெரியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ரயில்வே அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் பயணிகளின் வசதிக்காக மின்தூக்கி எஸ்க்லேட்டர் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே அமைச்சகம் 2 மின்தூக்கிகள் கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்பட்டு 6 மாதத்திற்குள் முடிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.