ரயில்வே நிலைய மேற்கூரை சீரமைப்புப் பணியின் போது, தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ரயில்வே நிலையத்தில் உள்ள மூன்றாவது நடைமேடையின் மேற்கூரையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியை ஒப்பந்த அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. இந்நிலையில் பணியில் கமலாபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான மணி என்பவர் ஈடுபட்டிருந்தார்.அப்போது மேற்கூரையின் மேல்சென்ற உயர்மின்னழுத்த மின்கம்பி மீது மணி எதிர்பாராமல் கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு, அவர் படுகாயமடைந்தார்.
இதைப் பார்த்த பயணிகள் மணியை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேற்கூரை சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பயணிகள் கூறுகையில், ‘ரயில்வே காவல் நிலையம் முன்பே விபத்து நடைபெற்ற நிலையிலும், காவலர்கள் யாரும் மீட்க முன் வரவில்லை. உயர் கம்பிகள் செல்லும் இடத்தின் அருகே பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல், பணியை மேற்கொண்டதால் தான் விபத்து ஏற்பட்டு உள்ளது’ தெரிவித்தனர்.