சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டி என்பவர் தன் நண்பர்களுடன் சேர்ந்துக்கொண்டு ரயிலில் வந்த பயணிகளை கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் முன்ஜாமீன் கோரி மாணவன் தாக்கல்செய்த மனுவை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். இந்நிலையில் மாணவனின் தந்தையை நேரில் வர வழைத்து நீதிபதி விசாரணை மேற்கொண்டார். மாணவர் குட்டியின் தந்தை சிறிய உணவகத்தில் காசாளராகப் பணிபுரிந்து, கஷ்டத்துடன் மகனை படிக்க வைப்பதாக தெரிவித்து உள்ளார்.
தந்தையின் நிலைமையையும் குடும்பத்தின் நிலைமையையும் அறிந்த நீதிபதி, அடாவடி செய்த மாணவன் குட்டி 6 வாரங்களுக்கு சனிக்கிழமை தோறும் சென்னையிலுள்ள உடல் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான மித்ரா மறு வாழ்வு மையத்திற்குச் சென்று சேவைபுரிய வேண்டும் என தெரிவித்தார். மறு வாழ்வு மையத்திலுள்ள ஊழியர்களுக்கு பராமரிப்புப் பணியில் உதவவேண்டும் என்ற நிபந்தனையோடு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
அந்த மாணவர் அங்கு சேவை செய்ததற்கான அறிக்கையை, ஒவ்வொரு வாரமும் விடுதி காப்பாளரிடம் சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மாணவனுக்கு மனிதாபிமானத்தின் அர்த்தத்தை உணர்த்தவேண்டும் என்பதற்காகவே இந்த நிபந்தனை விதிப்பதாக மனுதாரரான மாணவர் குட்டியிடம் நீதிபதி தெரிவித்து இருக்கிறார். மாணவனின் கல்வி பாதிப்படைந்துவிட கூடாது என்பதற்காகவே அவரின் அடாவடி செயலுக்கு தண்டனை வழங்காமல், நிவாரணம் வழங்கியிருப்பதாக நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.