இந்தியாவிலுள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே அதிகளவு விரும்புவர். அதிலும் குறிப்பாக நீண்டதூரம் பயணம் மேற்கொள்பவர்கள் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தும் பயணிப்பார்கள். ஏனென்றால் டிக்கெட் கட்டணம் ரயில்களில்தான் குறைவு என்பதோடு, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம் என்பதற்காகவே மக்கள் அதிகளவு ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். இவ்வாறு இருக்கையில் ரயில்பயணிகளுக்கான, குறிப்பாக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கான முக்கிய அறிவிப்புதான் இது. ஐஆர்சிடிசி செயலி மற்றும் இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றி இருக்கிறது. இந்த விதியின் அடிப்படையில் டிக்கெட் பதிவுசெய்யும் முன் உங்கள் கணக்கை சரிபார்க்க வேண்டும்.
அந்த வகையில் வெரிபை செய்ய வேண்டும். புரியும்வாறு கூற வேண்டுமென்றால் நீண்ட காலமாக, அதாவது குறைந்தது 2 வருடங்களாக ஐஆர்சிடிசி ஆப் (அல்லது) இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யாத பயனர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்னதாக மொபைல்எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்க்க வேண்டும். இல்லையென்றால் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவுசெய்ய முடியாது. ஆகவே முன் பதிவு செய்யும் முன்பு மேற்குறிப்பிட்டுள்ள சரிபார்ப்பு செயல்முறையை கையாள வேண்டும். தற்போது அதை எப்படி சரிபார்க்கப்பட வேண்டும் என்பதை படிப்படியாக பார்க்கலாம்.
# ஐஆர்சிடிசி செயலி (அல்லது) இணையதளத்திற்குச் சென்று சரிபார்ப்பு சாளரத்தில் (வெரிஃபிகேஷன் விண்டோ) கிளிக் செய்ய வேண்டும்.
# இங்கே நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவேண்டும்.
# 2 தகவல்களையும் உள்ளிட்ட பின் வெரிஃபை பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
# அதன்பின் உங்கள் மொபைலில் OTP வரும். அதனை உள்ளிட்டு மொபைல் எண்ணைச் சரிபார்க்க வேண்டும்.
# இதேபோல் மின்னஞ்சல் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட்ட பின் உங்கள் மெயில் ஐடி சரிபார்க்கப்படும்.
# தற்போது உங்கள் கணக்கிலிருந்து எந்த ரயிலுக்கும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம்.
அத்துடன் ஐஆர்சிடிசி-யின் 1 யூசர் ஐடியில், அதுவும் ஆதார்இணைக்கப்பட்ட பயனாளர் ஐடி வாயிலாக மாதத்திற்கு 12 டிக்கெட் முன் பதிவு செய்யலாம் என்ற வரம்பு தற்போது 24ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோன்று ஆதார் இணைக்கப்படாத கணக்கிலிருந்து 6 டிக்கெட்டுகளுக்கு பதில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.