தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டது. அதனால் பொதுமக்கள் வெளியில் செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் செல்ல வேண்டிய பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். அதன்பிறகு கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக வழங்கப்பட்டது. அதனால் பொது போக்குவரத்தை மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து வித பயணிகள் ரயில் சேவைகளும் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 62 கோடைகால வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் -நாகர்கோவில் இடையே இரு வழித்தடத்திலும் 20 சேவைகள், நெல்லை -தாம்பரம், தாம்பரம்-எர்ணாகுளம் இடையே 10 சேவைகள் உட்பட 62 கோடைகால வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த வாராந்திர ரயில்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. இதனால் ரயில் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.