தென்னக ரயில்வே ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாக குறைந்து வரும் நிலையில்,கொரோனா காலத்தில் இயங்கிவந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் தற்போது படிப்படியாக சாதாரண ரயில்கள் ஆக மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலானது ஆரம்பத்தில் 4 முறை இயக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பால் நிறுத்தப்பட்டது. அதன் பின் கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் இயக்கப்பட்டது.
ஆனால் அந்த ரயிலானது நெல்லையிலிருந்து காலையில் ஒரு முறை, மறுமார்க்கமாக மாலையில் செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு ஒரு முறை என்ற நிலையில் இயக்கப்பட்டு வந்தது. இதனை அடுத்து ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கையின் படி அந்த ரயிலை கூடுதலாக 2 முறை இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து இயக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, மார்ச் 10 (நேற்று) முதல் செங்கோட்டை- நெல்லை பயணிகள் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு விரைவு ரயிலானது தினமும் 10:15 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு நெல்லைக்கு மதியம் 12:25 மணிக்கு வந்து சேரும். அதனைத் தொடர்ந்து நெல்லையிலிருந்து மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, 6:15 மணிக்கு செங்கோட்டைக்கு சென்றடையும். மேலும் இந்த சிறப்பு ரயிலானது நெல்லைடவுன், பேட்டை, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழகடையம், மேட்டூர், பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி உள்ளிட்ட நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
இதையடுத்து இந்த சிறப்பு விரைவு ரயிலானது மறுஅறிவிப்பு வரும் வரை, மற்ற ரயில் நிலையங்களில் நிற்காது எனவும் ஏற்கனவே காலை, இரவு நேரத்தில் ஒருமுறை செல்கின்ற ரயிலானது மற்ற நிறுத்தங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் தூத்துக்குடி, திருச்செந்தூர் பயணிகள் ரயில் விரைவு ரயில் இயங்கவுள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.