நீண்ட தூரத்திற்கு பயன்படுத்தப்படும் ரயில்களில் இரண்டு பெட்டிகளை தவிர்த்து அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாக மாற்ற ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் ரயில்களை நம்பியுள்ளனர். குறைவான கட்டணம் குறித்த நேரத்தில் பயணம் என்பதால் பெரும்பாலானர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
மத்தியில் பாஜக அரசு அமைந்ததிலிருந்து ரயில் கட்டணங்கள் அதிகரித்து வருவதுடன் சாதாரண பேசஞ்சர் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. தனியார் மையத்தை ஊக்குவித்து மத்திய அரசு ரயில்வே துறையையும் மெல்ல மெல்ல தனியாருக்கு தாரை வார்த்து வருகின்றது. மூத்த குடிமக்களின் கட்டண சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்தது. தொலைதூரங்களுக்கு செல்லும் மூத்த குடிமக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது .
சாதாரண ரயில்களின் பெயர் மாற்றம் செய்து மக்களிடம் அதிக கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது தொலைதூர ரயில்களில் முன்பதிவு வசதி கொண்ட இரண்டு ஸ்லீப்பர் பெட்டிகள் மட்டுமே இனி இணைக்கப்படும் எனவும், மீதமுள்ள பெட்டிகள் அனைத்தும் குளிர்சாதன பெட்டிகளாக மாற்றவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், முத்துநகர், பொதிகை, மலைக்கோட்டை, சோழன் மற்றும் கோவை மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளில் இடம் கிடைக்காத மக்கள் குளிர் சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் நிலை ஏற்படும். விமான சேவைக்கு இணையாக ரயில்வே துறையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றன. இருப்பினும் இந்த முடிவு ஏழை எளிய மக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.