தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு நாளை முதல் தொடர் விடுமுறை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 5-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளது. அதோடு பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் சேலம் ரயில்வே கோட்டம் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும், மைசூரில் இருந்து மயிலாடுதுறைக்கும், எஸ்வந்த்பூரில் இருந்து திருநெல்வேலிக்கும், திருவனந்தபுரத்திலிருந்து டாட்டா நகருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் எஸ்வந்த்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு அக்டோபர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. எஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:30 மணி அளவில் நெல்லையை வந்தடையும். அதன் பிறகு அக்டோபர் 5 மற்றும் 12 ஆகிய தினங்களில் திருநெல்வேலியில் இருந்து எஸ்வந்த்பூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நெல்லையிலிருந்து காலை 10:40 மணியளவில் புறப்படும் ரயில் இரவு 11:30 மணி அளவில் எஸ்வந்த்பூரை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர், கார்மேலரம், பனஸ்வாடி போன்ற பகுதிகளில் நின்று செல்லும்.
இதனையடுத்து மைசூரில் இருந்து செப்டம்பர் 30-ஆம் தேதி மதியம் 12:05 மணி அளவில் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5 மணி அளவில் தூத்துக்குடியை சென்றடையும். அதன் பிறகு தூத்துக்குடியில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி மாலை 3 மணி அளவில் புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 12:25 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர் காண்டோன்மென்ட், பெங்களூர், எலியூர் போன்ற பகுதிகளில் நின்று செல்லும்.
இதைத் தொடர்ந்து மைசூரில் இருந்து இரவு 11:45 மணியளவில் புறப்படும் ரயில் ஓசூர், தர்மபுரி வழியாக மறுநாள் காலை 7:35 மணிக்கு சேலத்தை வந்தடைந்து, 7:40 மணியளவில் கிளம்பி நாமக்கல், கரூர், திருச்சி வழியாக மதியம் 3:30 மணி அளவில் மயிலாடுதுறையை சென்றடைந்து, இங்கிருந்து மாலை 6:45 மணி அளவில் புறப்பட்டு அதிகாலை 3:15 மணி அளவில் சேலத்தை வந்தடைந்து, பின் 3:20 மணிக்கு கிளம்பி மைசூரை சென்றடையும்.
மேலும் திருவனந்தபுரத்திலிருந்து இரவு 2:30 மணி அளவில் புறப்படும் ரயில் போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மதியம் 2:47 மணியளவில் சேலத்தை சென்றடைந்து ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக காலை 4:20 மணியளவில் டாட்டா நகரை சென்றடையும். இங்கிருந்து இருந்து அக்டோபர் 4 மற்றும் 11-ஆம் தேதிகளில் காலை 5:15 மணியளவில் புறப்படும் ரயில் காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் மாலை 6:42 மணியளவில் சேலத்தை சென்றடைந்து, பின் 6:45 மணி அளவில் கிளம்பி ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 5:50 மணியளவில் திருவனந்தபுரத்தை சென்றடையும்.